ரம்புட்டான் பழம்
சூப்பர் பழம்-ரம்புட்டான்:
ரம்புட்டான் பழம் லேசான புளிப்பு கலந்த இனிப்புச் சுவையினை உடையது. இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. இப்பழம் தமிழ்நாட்டில் குற்றால சீசன் மாதங்களான ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிக அளவு கிடைக்கும். சீசன் காலங்களில் இப்பழம் தெருவோரக் கடைகளிலும் அதிக அளவு கிடைக்கிறது. இதன் மருத்துவத் தன்மையின் காரணமாக இப்பழம் சூப்பர் பழம் என்ற அந்தஸ்தைப் பெறுகிறது.
ரம்புட்டானின் தாயகம் இந்தோனேஷியா ஆகும். எனினும், இது இந்தியா, மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், ஈகுவடார், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் இது பரவலாகக் காணப்படுகிறது.இப்பழமானது வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலங்களில் செழித்து வளரக் கூடிய மரவகை தாவரத்திலிருந்து கிடைக்கிறது.
இப்பழமானது 10 - 20 அடி உயரம் வரை வளரக்கூடியது. இத்தாவரத்தில் ஆண், பெண் மற்றும் இருபால் மரங்கள் காணப்படுகின்றன. ஆண் மரத்திலிருந்து பழங்கள் கிடைப்பதில்லை. எனினும் தேனீக்களின் மகரந்த சேர்க்கையின் மூலம் பெண் மரத்திலிருந்து பழங்கள் கிடைக்கின்றன. இப்பழ மரத்திலிருந்து பூக்கள் நல்ல மணத்துடன் வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் காணப்படுகின்றன.
இப்பூக்களிலிருந்து காய்கள் பச்சை வண்ணத்தில் தோன்றுகின்றன. இக்காய்கள் பழங்களாக மாறும்போது சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த வண்ணத்தில் மேற்புறத் தோலினைக் கொண்டுள்ளன. தோலின் மேற்புறத்தில் ரப்பர் போன்ற மூடிகள் காணப்படுகின்றன. பழத்தின் உட்புறம் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்தில் முட்டை வடிவ சதைப்பகுதி உள்ளது.
இச்சதைப்பகுதி நுங்கு போன்று வழுவழுப்பாகவும், மென்மையாகவும், புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் நீர்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. சதையின் நடுவில் பழுப்பு வண்ண கொட்டை ஒன்று இருக்கும். இப்பழம் முட்டை வடிவத்தில் 1-2 அங்குலத்தில் காணப்படுகிறது. இப்பழ மரத்தின் பூக்கள் அதன் தனிப்பட்ட நறுமணத்தின் காரணமாக பூங்கொத்துகளில் இடம் பெறுகின்றன.
சத்துக்கள்:
- ரம்புட்டானில் புரோடீன்கள்,
- கார்போஹைட்ரேட்டுகள்,
- நார்சத்துக்கள்,
- அதிக அளவு நீர்சத்து,
- கால்சியம்,
- மெக்னீசியம்,
- இரும்புச் சத்து,
- பாஸ்பரஸ்,
- பொட்டாசியம்,
- துத்தநாகம் போன்ற தாதுஉப்புகள்,
- விட்டமின சி,
- விட்டமின பி 1 (தயாமின்),
- விட்டமின் பி 3 (நியாசின்),
- விட்டமின் பி 6 (பைரிடாக்ஸின்)
போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
மருத்துவப் பயன்கள்:
- ரம்புட்டானின் இலை, பட்டை, வேர் மற்றும் பழம் போன்றவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளிட்டவைகளுக்கு ரம்புட்டான் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது.
- இரும்புச்சத்து இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின், ஆக்ஸிஜனை உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்ல உதவுகிறது.
- இரும்புச்சத்து குறைபாட்டில் ஏற்படும் இரத்த சோகை, சோர்வு, மயக்கம் ஆகியவற்றை இப்பழத்தினை உண்டு சரி செய்யலாம்.
- இப்பழத்தில் உள்ள புரோடீன்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இப்பழத்தினை உண்ட உடன் உடனடி ஆற்றலை வழங்குகின்றன.
- இப்பழத்தில் மாங்கனீசு உடலின் இயக்கத்திற்கு காரணமான என்சைம்களின் உற்பத்தி மற்றும் அவற்றின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.
- இப்பழத்தில் காணப்படும் பாஸ்பரஸ் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சிறுநீரகம் நன்கு செயல்படச் செய்கிறது. பாஸ்பரஸ் உடலில் உள்ள தசைகளின் வளர்ச்சி பராமரிப்பு ஆகியவற்றிற்கு முக்கியமானதாகும்.
- இப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்க துணை புரிவதுடன், சத்துகளை உறிஞ்சவும், செரித்தலின்போது ஏற்படும் கழிவு நீக்கத்திற்கும் துணை புரிகிறது.
- இதனால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது.
- இப்பழத்தில் விட்டமின் சி யானது ஏனைய பழங்களைவிட அதிகளவில் காணப்படுகிறது. இந்த விட்டமின் சி உடலுக்கு நோய் தடுப்பாற்றலை வழங்குகிறது.
- மேலும் தொற்று நோய்களிலிருந்தும், கிருமிகளிடமிருந்தும் உடலைப் பாதுகாக்கிறது. உடலானது காப்பர் மற்றும் இரும்புச் சத்தினை உறிஞ்சவும், செல்களைப் பாதுகாக்கவும், விட்டமின் சி யானது உதவுகிறது.
- உடல் வளர்ச்சிதை மாற்றத்தின்போது ஏற்படும் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகளையும் தடைசெய்து உடலை புற்று நோய் தாக்குதலிருந்து பாதுகாக்கிறது.
- இதில் காலிக் அமிலம் உள்ளது. இப்பழத்தோலும், விதைகளும் புற்றுநோய்க்கு மருந்தாகச் செயல்படுகின்றன.
- இதன் இலைகளை அரைத்து நெற்றியில் பற்றுப்போட நரம்புகளை அமைதிபடுத்தி தலைவலியை குறையச் செய்யும்.
- இம்மரத்தின் பட்டையை அரைத்து வாய்ப்புண்ணுக்கு மருந்தாகப் போடப்படுகிறது. மரவேரினை அரைத்து பற்று போட காய்ச்சல் குறையும்.
ரம்புட்டானை வாங்கும்போது புதிதாகவும், மேல்தோலின் நிறம் அடர்ந்த மஞ்சளுடன் கூடிய சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். தோலில் வெடிப்பு உள்ள பழங்களை நீக்கிவிட வேண்டும். மேற்புறத்தில் உள்ள ரப்பர் போன்ற மூடியானது விறைப்பாக இருக்க வேண்டும். சாதாரண வெப்பநிலையில் இரண்டு நாட்கள்வரை வைத்திருந்து இப்பழத்தினைப் பயன்படுத்தலாம். குளிர்பதனப் பெட்டியில் ஒரு வாரம்வரை இப்பழத்தினை வைத்திருந்து பயன்படுத்தலாம். இனிப்புசுவை அதிகமுள்ள பழமாகும். அதனால் சர்க்கரை நோயாளிகள் இதனை அளவோடு பயன்படுத்த வேண்டும். இப்பழம் சாலட், ஜாம், இனிப்பு வகைகள், ஜெல்லி, சர்பத், சூப் போன்றவை தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
குறிச்சொற்கள்: