வளைகாப்பு சீமந்தம் நம் பாரம்பரியங்கள்
பிரசவம் என்பது மறுபிறவி
பிரசவம் என்பது மறுபிறவி என்பார்கள். அதை உடல் வலுவுடனும், மன வலுவுடனும் தாங்க வேண்டும் என்பதற்காகவே நம் இந்திய பாரம்பரியத்தில் எத்தனையோ விஷயங்களைப் பார்த்து பார்த்து செய்துள்ளார்கள் நம் முன்னோர்கள். அவை ஆச்சரியமானவை மட்டுமல்ல. விஞ்ஞான ரீதியாக நிரூப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பிரசவத்துக்கு முன்பு வளைகாப்பு நடத்துகிற விஷயத்தையே சொல்லலாம்.
வளைகாப்புக்கு நிறைய பெண்கள் கூடி, கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள் வளையல் போடுவார்கள். இந்த சடங்கில் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமையையும் கவனிக்கலாம். வளையல் இடும் பெண்ணின் கையை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டுப் பார்த்தால், கை விரல்களை கூட்டி வளையல்களை உள்ளே செலுத்தும்போது சற்று சுலபமாக இருக்கும். வளையலை மணிக்கட்டுப் பகுதிக்குச் செலுத்தும்போது சற்று கடினமான வலி உண்டாகும். அந்த வலியைச் சற்று பொறுத்துக் கொண்டால், அடுத்த நிமிடமே கரங்களில் வளையல் ஏறிவிடும். இப்படித்தான் பிரசவமும்.
இந்த வளையல்கள் ஏற்படுத்தும் அதிர்வு ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல தாலாட்டு, நம் தாய் நம்முடன் இருக்கிறாள் என்று குழந்தைக்கு அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு அழகானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. அந்தக் காலத்தில் வீடு என்பது பெரியதாக இருந்தது. பிரசவத்துக்கு முன்பு அடிக்கடி உறக்கம் கலைந்து, அந்தப் பெண்ணுக்கு சிறுநீர் செல்ல வேண்டியதிருக்கும். இரவு நேரத்தில் கர்ப்பமான பெண் அறையைக் கடந்து, பின்புறமிருக்கும் கழிவறைக்குப் போகும்போது அந்த வளையல் சப்தம் அந்த பெண் எங்கே செல்கிறாள் என்பதை சட்டென்று சுட்டிக்காட்டும். ஏம்மா என்னை எழுப்பக்கூடாதா, இரு நானும் வர்றேன் செல்லமாக அம்மா கடிந்துக் கொண்டு துணைக்குச் செல்வாள் தாய்.
வளையல் போட்ட கையோடு கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் செல்வது அவர்களின் மனநலன் சம்பந்தப்பட்டது. இந்திய நாட்டில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளில் எல்லாம் பிரசவம் என்று வந்தாலே அந்தப் பெண் தாய் வீட்டுக்குச் சென்றுவிடுவது வழக்கமாக இருக்கிறது. நம் அம்மா, அப்பா, கணவர், சொந்தங்கள், மருத்துவர் எல்லாம் நம்மை பிரசவம் எனும் அந்த பெருநிகழ்வில் இருந்து பத்திரமாக மீட்பார்கள் என்ற நம்பிக்கைதானே, அன்று செக்கப்புகள், மருந்து மாத்திரைகள், மாதத்துக்கு ஒரு முறை ஸ்கேன் என்று இல்லாமல் எல்லா பிரசவங்களையும் சுகப்பிரசவமாக்கின. அந்த நம்பிக்கையை கர்ப்பிணிகளின் மனதில், அவளைச் சுற்றியுள்ளவர்களே ஆழமாக விதைப்பார்கள். இரண்டு, நான்கு, ஆறு என்று மாதங்கள் அவர்களுக்குத் தெரியாமலே சுகப்பிரசவத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் இப்போது…?
குறிச்சொற்கள்: