நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா
கருப்பு இன மக்களின்
விடுதலைக்காக
27 ஆண்டுகள் சிறையில் கிடந்தாய்!
தென்னாப்பிரிக்கா என்ற
கருப்பு நிறக்காட்டில்
சிவப்பு மலராக மலர்ந்தவனே!
நீ
சிறைச்சாலையில் கல்லுடைத்தாய்
சித்ரவதைப் பட்டாய்
காலமெல்லாம் கடின உழைப்பால்
கஷ்டப் பட்டாய்! ஏனென்றால்,
முதுகெலும்பை உடைத்திடும்
உழைப்புக்கு நீ ஓர் எடுத்துக்காட்டு!
மனித உருவில்
வாழ்ந்த ஒரு கருப்பு வைரம் நீ!
தடியடி படாமல், தழும்பேறாமல்
தியாகிகள் என்று தம்மையே தம்பட்டம் அடித்துக் கொள்ளும்
நம் தலைவர்கள் போல் அல்லாமல்,
நீ ஒரு புடம் போட்ட
தங்கத் தலைவன்!
நீ
நிறவெறி போருக்குத்
தலைமை ஏற்று
உன் வாழ்நாளையே
மனிதகுல உரிமைக்காக
அர்பணித்தாய்!
கருப்பு இன மக்களின்
விடுதலைக்காக
27 ஆண்டுகள் சிறையில் கிடந்தாய்!
அதுவும் ஒரே ஒரு வாழைப்பழம் கூடச்
சாப்பிடக் கிடைக்காமல்
20 ஆண்டுகள்
சிறைச்சாலையில் வாழ்ந்தவன் நீ!
உன் சிறைச்சாலைத்
தவத்திற்கு ஒப்பாக
உலகில் இன்னொருவரைச்
சொல்லமுடியுமா?
அதனால்தான்,
உன் சிறைவாசம்
தென்னாப்பிரிக்கா நாட்டையே
திருப்பிப் போட்டது!
நீ
நிறவெறி நெருப்பைத் தனித்திட
தன்மானம் என்னும் தண்ணீரை ஊற்றித் தன்னையே தானம் செய்தாய்! உலகில் தன்னிகரற்ற
தனித்தலைவன் நீ!
உலக வரலாற்றில் காந்தியடிகள்
எப்படி ‘மகாத்மா’ என்று மக்களால் மதிக்கப்பட்டாரோ! அதே போல் நீயும் இன்னொரு
மகாத்மா ஆகிவிட்டாய்!
“தியாகம்” என்ற சொல்லை
இன்று முதல் அகராதியிலிருந்து எடுத்துவிடுவோம்......... அதனை
‘நெல்சன் மண்டேலா’ என்றே திருத்திக் கொள்வோம்!.
‘கவிச்சுடர்” அழகுதாசன் கோவை - 24
குறிச்சொற்கள்: