1 கப் பச்சை பயறு வெச்சு ஒருமுறை இப்படி குழம்பு செய்யுங்க ருசி வேற லெவல்-ல இருக்கும்
1 கப் பச்சை பயறு வெச்சு ஒருமுறை இப்படி குழம்பு செய்யுங்க ருசி வேற லெவல்-ல இருக்கும்
மதிய வேளையில் எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு செய்து போரடித்துவிட்டதா? சற்று சிம்பிளாகவும், அதே சமயம் சுவையாகவும் சாதத்திற்கு ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1 கப் பச்சை பயறு இருந்தால், அதைக் கொண்டு கொங்குநாட்டு ஸ்டைலில் குழம்பு செய்யுங்கள்.
இந்த குழம்பின் ஸ்பெஷலே தாளிப்பதற்கு கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்காமல், தேங்காய் எண்ணெயில் தனியாக ஒரு பொடியை சேர்த்து தாளிப்பது தான். இந்த குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
உங்களுக்கு கொங்குநாட்டு பச்சை பயறு குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாட்டு பச்சை பயறு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பச்சை பயறு - 1 கப்
- தண்ணீர் - 4 கப்
- பூண்டு - 5 பல்
- தக்காளி - 1 (நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
- மல்லி - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- வரமிளகாய் - 3
தாளிப்பதற்கு...
- தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 20
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - சுவைக்கேற்ப
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சை பயறை சேர்த்து நிறம் மாற வறுத்து இறக்கி, நீரில் 2 முறை அலசிக் கொள்ள வேண்டும்.
- பின்னர் குக்கரில் கழுவிய பச்சை பயறை சேர்த்து, அத்துடன் 4 கப் நீரை ஊற்ற வேண்டும்.
- அதன் பின் பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
- பின்பு மிக்சர் ஜாரில் மல்லி, சீரகம், வரமிளகாய் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
- பின் அதில் பொடித்த பொடியை சேர்த்து, அத்துடன் கறிவேப்பிலை சேர்த்து குறைவான தீயில் வைத்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
- விசில் போனதும், குக்கரைத் திறந்து, அதில் தாளித்து வைத்துள்ளதை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, அந்த குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, நன்கு 3-4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
- இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
- பின் அதில் உள்ள அதிகப்படியான நீரை ஒரு கிண்ணத்தில் வடித்து எடுத்துக் கொண்டு, மத்து கொண்டு பச்சை பயறை நன்கு மசித்து விட்டு, பின் அதில் எடுத்து வைத்துள்ள பச்சை பயறு நீரை ஊற்றி கிளறினால், சுவையான கொங்குநாட்டு பச்சை பயறு குழம்பு தயார்.
குறிச்சொற்கள்: