கீழடியில் பல நூற்றாண்டுகளாக தொடரும் பருத்தி விவசாயம்! கண்டெடுக்கப்பட்ட நெசவு கருவி, சாயமிடும் தொட்டி
கீழடியில் பல நூற்றாண்டுகளாக தொடரும் பருத்தி விவசாயம்! கண்டெடுக்கப்பட்ட நெசவு கருவி, சாயமிடும் தொட்டி
கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சிகள், சாயமிடும் தொட்டிகள் மற்றும் நூற்புத் தண்டுகள் உள்ளிட்டவை அங்கு பல்லாண்டு காலத்துக்கு முன்பே பயன்பாட்டில் இருந்ததைக் காட்டியுள்ளன. இதன் மூலம், அப்பகுதியில் பருத்தி விவசாயமும், நூல் நூற்பும் நடைபெற்றதாக அறிய முடிகிறது.
இன்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் பருத்தி விவசாயம் செய்து வருகின்றனர். இது பழைய காலத் தொடர்ச்சியின் மிச்சமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கீழடி அகழாய்வு
சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 2013 முதல் 2016 வரை மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடந்தது. தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் இந்த அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இந்த அகழாய்வின்போது 5,765க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த அரிய வகை பொருட்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து, முதல் மற்றும் 2 ஆம் கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசிடம் கடந்த 2 ஆண்டுக்கு முன்னர் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.
அதன்பிறகு கீழடியில் அகழாய்வுப் பணிகளை மத்திய அரசு முடித்துக்கொண்அ நிலையில் தற்போது வரை 10 கட்ட அகழாய்வுகளை தமிழகத் தொல்லியல் துறை நடத்தியுள்ளது. அதில் கிடைத்த ஆயிரக்கணக்கான பழம்பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் வைக்கும் அளவுக்கு தொல் பொருள்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த அறிக்கையில் நம்பகத்தன்மையை அதிகரிக்க தேவையான விபரங்களுடன் திருத்தம் தேவை எனக் கூறி மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இதுதொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
பழங்காலப் பொருட்கள்
கீழடியில் ஏராளமான தொல்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பழங்காலப் பொருட்களின் பட்டியலில் கண்ணாடி மற்றும் டெரகோட்டா மணிகள், எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஆபரணங்கள், தந்தம் மற்றும் முத்து ஆகியவற்றால் செய்யப்பட்ட மணிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. சுழல் சுருள்கள், முத்திரைகள், வளையல்கள், பகடை, பொம்மை வண்டி சக்கரங்கள், விளையாட்டு வீரர்கள், காதணிகள், விளக்குகள், பதக்கங்கள், பந்துகள் மற்றும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் டெரகோட்டா சிலைகள் கிடைத்துள்ளன.
விவசாயம் - கைவினைக் கலை
பழங்காலத் தமிழர்களின் சமூக - பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பொருள்கள் பயன்பாட்டை விளக்குவதாக இந்த கண்டெடுப்புகள் அமைந்துள்ளன. கீழடி அகழ்வாராய்ச்சிகள் பழமை வாய்ந்த மதுரைக்கு அருகிலுள்ள வாழ்க்கையைப் பற்றி மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளன. உலோகவியல், ஜவுளி, மணி தயாரித்தல், இரும்பு கருவி தயாரித்தல், தாமிர பயன்பாடு, வர்த்தகம், கலை மற்றும் கைவினைகளில் நிபுணத்துவம் போன்றவற்றில் கணிசமான தொழில்நுட்ப முன்னேற்றம், விவசாயப் பொருட்கள் உற்பத்தி, நகர்ப்புற திட்டமிடல் ஆகியவையும் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மூலம் தெரியவந்துள்ளன.
பருத்தி - நூல் நூற்பு
கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சிகள், சாயமிடும் தொட்டிகள் மற்றும் நூற்புத் தண்டுகள், சுழல்களின் பகுதிகள் காலங்காலமாக எஞ்சியுள்ளன என்பதைக் காட்டுகின்றன. மிச்சம் இருக்கும் ஒரே தொடர்பு என்னவென்றால், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் இன்னும் பருத்தி விவசாயம் செய்து வருகின்றனர். வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் பாசனம் பெறாவிட்டாலும், கிணறுகளின் வாயிலாக விவசாயிகள் பருத்தி பயிரிட்டு விளைவித்து வருகின்றனர்.
இன்றும் பருத்தி விவசாயம்
எனினும், இது 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பயிரிடப்பட்ட அதே ரகமா என்பதை உறுதி செய்ய முடியாது. கீழடி பகுதி விவசாயிகள் இன்றைய காலகட்டத்தில் தங்கள் காடுகளில் விளையும் பருத்தியை எடுத்து மதுரையை அடுத்த திருமங்கலத்தில் விற்கிறார்கள். அங்கு இயந்திரங்கள் மூலம் விதைகள், பருத்தி பிரிக்கப்படுகின்றன. கீழடியில் சுமார் ஒரு ஏக்கரில் பருத்தி பயிரிட்டு வரும் விவசாயி முருகேசன், தனக்கு கிலோவுக்கு 60 ரூபாய் கிடைக்கும் என்று கூறுகிறார்.
குறிச்சொற்கள்: