கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி என்னும் இந்தக் கீரை பாரத நாடெங்கும் பரந்து காணப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,000 அடி வரை இது தன்னிசையாக வளரக்கூடிய ஒரு வகைக் கீரையாகும்.
சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய மலைபடுகடாம் கையாந்தகரை என்னும் இக்கீரையைப் பற்றி மிகச்சிறப்பாகப் பேசுகிறது. இதனைக் கரிசல், இம், காண், நீ என சொற்களைப் பிரித்துப் பொருள் காண்பார்கள். இவ்வாறு பிரிக்கின்ற பொழுது “ உன் உடல் தங்கமாவதை நீ காண்பாயாக” என்று இக்கீரையை இதனை உண்பவர்களைச் சொல்வது போல் இதன் பெயர் அமைந்திருப்பதைக் காணலாம்.
நெல் வயல்களிலும், வாய்க்கால் வரப்புகளிலும், ஏரிக்கரைகளிலும் மற்றும் உரப்பிடிப்புள்ள இடங்களிலும் இது மிக அதிகமாகக் காணப்படும். எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சப்பட்ட இந்த இலையின் சாற்றைத் தலைவலி முதலியவற்றிற்குத் தேய்க்கலாம். இவ்வாறு காய்ச்சப்பட்ட எண்ணெய் தலைமுடியைக் கருமையாக்குவதற்கும் முடி நிறைய வளர்வதற்கும் பயன்படுகிறது.
இச்சாற்றை உடலில் வலியுற்ற பகுதிகளில் தடவ தோலினால் உட்கிரகிக்கப்பட்டு வலி நீங்குகிறது. இந்தச் சாற்றை ஈறுகளின் மீது தடவ பல்வலி நீங்கும். இருமலுக்கும், காய்ச்சலுக்கும், ஒரு தேக்கரண்டி அளவு கொடுக்க கட்டுப்படும். இந்த இலையின் சாறு கால்நடைகளுக்கு ஏற்படும் கொப்புளங்களுக்கும், புண்களுக்கும் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.
கால்நடைகளுக்கு கால் இடுக்குகளிலும், கழுத்துப் பகுதியிலும் ஏற்படும் புண்களுக்கும் இதன் வேர் மருந்தாகப் பயன்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையிலிருந்து எடுக்கப்படும் தைலம் முடியைக் கருமையாக்குவதோடு கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையை உண்பதால் கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளுக்கு நன்மை பயக்கிறது. இந்த உறுப்புகளில் தேங்கும் கழிவுகளை நீக்கிக் கெட்ட நீர்களை வெளியேற்றுகிறது.
அந்தந்த உறுப்புகளுக்குச் சக்தியையும் ஊட்டத்தையும் அளித்து உறுப்புகள் நன்கு இயங்க ஊக்குவிப்பதுடன் சிக்கலின்றி அவைகள் செயல்படுவதற்கு இக்கீரை உதவுகிறது. கண்ணொளி மங்கும்போது இந்த கீரை மருந்தாகப் பயன்படுகிறது. இந்தக் கீரையின் சாறு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இந்தச் சாற்றை குழந்தைகளுக்குத் தலையில் தேய்த்து குளிக்க வைப்பதால் செந்நிற முடி கருநிறமாக மாறுகிறது.
இக்கீரையின் இரண்டு சொட்டு சாற்றுடன் எட்டுச் சொட்டு தேனைக் கலந்து பிறந்த குழந்தைகளுக்குக் கொடுக்கச் சளி, நீர்க்கோவை போன்றவைகள் குணமாகும். நல்லெண்ணெய் அல்லது தேங்காய் உடலில் சப்த தாதுக்களை உரமாக்கி வலுவைத் தந்து உயிர் அணுக்களைப் பெருக்கி தங்க நிறம் போன்ற சருமத்தை உண்டாக்கும் குணமுடையது.
உடல் கனத்தையும், பருமனையும், தொந்தியையும், கரைக்க விரும்புபவர்கள், நாள்தோறும் பகல் உணவில் 2 முதல் 4 வாரம் தொடர்ந்து இக்கீரையை உண்டு வர நல்ல பலன் கிடைக்கும். இக்கீரை சாற்றினால் செய்யப்படும் கண்மை, மிகச் சிறந்த கண் மையாகும், இந்தக் கண்மையைக் கண் இமைகளுக்குத் தீட்டிவர கண்கள் மிக்க ஒளி பெறும். கண்கள் கவர்ச்சியுடையதாக விளங்கும்.
குறிச்சொற்கள்: