இலாபகரமான பால் பண்ணைக்கு தேவையான கன்று பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள்
இலாபகரமான பால் பண்ணைக்கு தேவையான கன்று பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள்
- பால் பண்ணைகளில் கன்று பராமரிப்பு என்பது மிக முக்கியமான பணியாகும். நல்ல தரமான கன்றுகள் பிறக்க வேண்டும் என்றால் சினைப்பசு அல்லது எருமையை நல்ல முறையில் சிறப்பான முறையில் பராமரிக்க வேண்டும்.
- எனவே, சினைப்பசு அல்லது எருமைகளுக்குத் தேவையான சத்துள்ள தீவனத்தை வழங்கி, அதனுடைய தீவன தேவையை பூர்த்தி செய்தால் அவற்றிலிருந்து பிறக்கக் கூடிய கன்றுகள் ஆரோக்கியத்தோடு பிறந்து, குறித்த காலத்தில் பருவத்திற்கு வந்து, சினை பிடித்து மீண்டும் கறவையில் மாடுகளை கொண்டுவந்து பால் பண்ணையை தொடர்ந்து இலாபகரமாக நடத்த மிகவும் இன்றியமையாததாகும்.
- சினை பசுவினுடைய தீவனத்தில் போதுமான தாது உப்புக்கள், உயிர்ச்சத்துக்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பசும்புல் வளரும் கன்றுகளுக்குத் தேவையான உயிர்ச்சத்து ‘ஏ’ வையும், தாது உப்புக்களையும் தருகின்றது. தொழவத்தில் நிறைகால சினைமாடுகளை மற்ற கால் நடைகளிலிருந்து பிரித்து வைக்க வேண்டும்.
- அதேபோல் மற்ற கால் நடைகளோடும் செர்த்து மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. கன்று ஈனும் 10 நாட்களுக்கு முன்பு சினை மாட்டினை தொழவத்தின் காற்றோடமான மற்றும் சுகாதரமான பகுதிக்கு மாற்றி பராமரிக்கப்பட வேண்டும்.
- தரையில் வைக்கோலை பரப்பி சினை மாடுகள் படுப்பதற்கு வசதி ஏற்படுத்திதர வேண்டும். சினை மாடு கிடேரியாக இருந்தால், அவற்றின் மடியை கன்று ஈனுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தடவி கொடுத்து, மடியில் இரத்த ஒட்டத்தினை சீர்செய்து, மடி நன்கு வளர்ச்சியடைய செய்ய வேண்டும்.
- இவ்வாறு செய்வதினால் கிடேரி மாடுகள் கூச்சமில்லாமல் கன்றுகளுக்கு பால் தருவதோடு, நமக்கும் பால் கறப்பதற்கு வசதியாக இருக்கும். சிறந்த முறையில் கன்றை
பராமரிக்க

1. கன்று பிறந்த உடன் அதன் மூக்கு, வாய் மற்றும் உடம்பு முதலிய பகுதிகளில் ஒட்டி இருக்கின்ற ஜவ்வை அதன் தாய் நாக்கினால் நக்கும்படி செய்ய வேண்டும். இப்படி செய்வதினால் பிறந்த கன்றுகளுக்கு சூடு ஏற்படுவதோடு பாச உணர்ச்சியும் கன்றுக்கு ஏற்படுகின்றது. இப்படி தன்னிச்சையாக நக்கி துடைக்காவிட்டால், சளி போன்ற ஜவ்வை ஒரு சுத்தமான காய்ந்த துணியினால் துடைக்க வேண்டும்.
2. கன்று ஈன்ற உடனே அதனுடைய தொப்புள் கொடியை தொப்புளிலிருந்து 2 அங்குல நீளம் விட்டு சுத்தமான கத்திரிக்கோலால் வெட்டி, டிங்க்சர் அயோடின் தடவ வேண்டும்.
3. கன்று பிறந்த ஒரு மணி நேரம் கழித்து சீம்பால் அவசியம் ஊட்டிவிட வேண்டும். இந்த பாலில் புரதச்சத்து, ஊட்டச்சத்து, தாதுச்சத்து, உயிர்ச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி முதலிய அனைத்தும் இருப்பதினால் சீம்பால் கன்றுக் கு தருவது மிகமிக அவசியம்.
4. குளம்பு நுனியிலுள்ள ஜவ்வு பாகத்தை அகற்றி விட்டால், கன்று சிரமம் இல்லாமல் எழந்து நிற்க்கும். சீம்பாலை கன்று குடித்த 2 மணி நேரத்திற்குள்ளே கன்றுகளுடைய ஜீரண சக்தி தூண்டப்பட்டு, உணவுப்பாதையில் தங்கியிருந்த கழிவுகள் வெளியேறும்.
5. கன்று எடையில் 10-ல் ஒரு பங்குக்கு சமமாக பால் கொடுக்க வேண்டும். கன்றுகள் பிறந்த 5-ம் நாள் குடற்புழ நீக்க மருந்து கொடுக்க வேண்டும். இதனை 20 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை தர வேண்டும். அதன் பிறகு 2 மாதத்திற்கு ஒருமுறை 6 மாத வயதை அடையும் வரை குடற்புழ நீக்க மருந்து கொடுக்க வேண்டும். இதனால் கன்றுகளுக்கு கழிச்சல் போன்ற நோய்களும், இறப்பு சதவிகிதமும் குறைவதோடு அதிக வளர்ச்சியும் உண்டாகும்.
6. கன்றுகள் 6 மாதம் வரையில் பாலை குடித்து வளரக்கூடியது. இந்த காலங்களில் கன்றுக்குத் தேவையான அளவு பால் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். கன்று பால் குடித்தவுடன் அதன் நாக்கில் உப்பு தடவி விட வேண்டும். இதனால் இளம் கன்றுகள் ஒன்றை ஒன்று நக்குகின்ற பழக்கம் நின்றுவிடும். இல்லையெனில், நக்குவதினால் உரோமம் வயிற்றுக்குள் சென்று உருண்டையாக திரண்டு உணவு செல்லும் பாதையை தடுக்க நேரிடும். இதனால் கன்றுகள் இறக்க நேரிடும். சில மாதங்களுக்குப் பிறகு பால் குடிப்பதை அறவே நிறுத்த வேண்டும்.
7. கன்றுகளுக்கு கொம்பு வளராமல் தடுப்பதற்கு கால்நடை மருத்துவர் உதவியுடன் கொம்பின் குருத்தை நீக்க வேண்டும். இதனை கன்று பிறந்த 15 முதல் 30 நாட்களுக்குள் செய்ய வேண்டும். 3 முதல் 6 மாத கன்றுகுட்டிகளுக்கு கொம்பு நீக்கும் கருவியைக் கொண்டு கொம்பின் குருத்தை பொசுக்கி அதன் மீது மருந்தை தடவி விட வேண்டும். இவ்வாறு கொம்பு வளராமல் தடுப்பதினால் மற்ற மாடுகளுக்கும் பராமரிப்பவர்களுக்கும் பாதுகாப்பாய் இருக்கும்.
8. கன்றினை தினமும் குளிப்பாட்டுவதினால் தோலின் மேல் உள்ள அழக்கு மற்றும் உதிர்ந்த உரோமங்களை அகற்றலாம். இதனால் தோலில் இரத்த ஓட்டம் அதிகமாகி, தோல் நல்ல வழவழப்பாக இருக்கும்.
9. கன்றுகளுக்கு 6 மாதத்திற்கு பிறகு தடுப்பூசி போட்டு தொற்று நோய்களிலிருந்து அவற்றை பாதுகாக்க வேண்டும். குறிப்பாக சப்பை நோய், தொண்டை அடைப்பான் நோய், கோமாரி நோய் மற்றும் அடைப்பான் நோய்களுக்கு தடுப்பூசி போட்டு கொள்வது நல்லது. அதுபோலவே, கன்றுகளை குடற்புழக்களின் தொல்லையிலிருந்து காக்க வேண்டும். குடற்புழக்களினால் கன்றுகள் வளர்ச்சிகுன்றி மற்ற நோய்களுக்குள்ளாவதை தடுக்க இயலும்.
10. கன்றுகள் மண் தின்பதை தவிர்க்க தாது உப்புக்கட்டி கொடுக்க வேண்டும். மூன்று வார கன்றுகளுக்கு தரமான பசும்புல் அளிக்க வேண்டும். எட்டு வார கன்றுகளுக்கு வைக்கோல் அளிக்கலாம். எப்போதும் போதுமான சுத்தமான தண்ணீர் அளிக்க வேண்டும். வெயில் காலங்களில் மரத்தழைகளை போட வேண்டும். இத்தகய முறைகளை கையாலுவதன் மூலம் இன்றைய கிடேரி நாளைய பசு என்ற பழமொழிக்கு ஏற்ப கன்றினை வளர்த்து நல்ல பலனை பெறலாம். ப. ராஜா, தூ. ம. அ. செந்தில்குமார் மற்றும் க. விஜயராணி கால்நடை உயிர்த்தொழில் நுட்பவியல் துறை, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,சென்னை -600007.
குறிச்சொற்கள்: